மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் இருந்து தருமபுரம் ஆதீனத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் காரில் வந்து கொண்டிருந்தார்.
மயிலாடுதுறையை அடுத்த மன்னம்பந்தல் என்னும் இடத்தில் கவர்னரின் கார் வந்தபோது போலீசாரின் பலத்த பாதுகாப்பையும் மீறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு அமைப்பினர் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்ட கவர்னரின் செயலை கண்டித்து அவருக்கு கருப்புக்கொடி காட்டினர். சிலர், கவர்னரின் பாதுகாப்புக்கு வந்த வாகனங்கள் மீது கருப்புக்கொடியை தூக்கி வீசினர்.
இதேபோல கவர்னர் தருமபுரம் ஆதீனத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பி சென்றபோது மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலத்தில் நின்ற சிலர் கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டிய சம்பவங்களில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வக்கீல் வேலு குணவேந்தன், திராவிடர் விடுதலை கழக மாவட்ட செயலாளர் மகேஷ் உள்பட 92 பேர் மீது மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்துள்ளார்.