ராமநத்தம் அருகே, ஆலம்பாடி கிராமத்தில் உள்ள ஏரியை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர். இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்கமுடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் முதல் கட்டமாக ஒருவரின் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொக்லைன் எந்திரத்துடன் நேற்று மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி தலைமையில் வருவாய் ஆய்வாளர் புஷ்பராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முத்தழகன் உள்ளிட்டவர்கள் சென்றனர்.
இதற்கு அங்கிருந்த ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்கள், ஒருவரது ஆக்கிரமிப்பை மட்டும் அகற்றாமல், அனைவரின் ஆக்கிரமிப்பையும் அகற்ற வேண்டும் என கூறி பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்த தகவலின் பேரில் மண்டல துணை வருவாய் தாசில்தார் பூர்ணிமா சம்பவ இடத்துக்கு சென்று ஏரி ஆக்கிரமிப்புகள் அனைத்தும் முறையாக அகற்றப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அதனை தொடர்ந்து ஏரியை ஆக்கிரமிப்பு செய்த ஒருவரின் ஆககிரமிப்புகள் அகற்றப்பட்டன.