0 0
Read Time:2 Minute, 57 Second

விருத்தாசலம், நல்லூர் ஒன்றியம் தாழநல்லூர் கிராமத்தை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தமிழ் தேசிய பேரியக்க துணைத் தலைவர் முருகன் தலைமையில் நேற்று விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் தாசில்தார் தனபதி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கிராம மக்கள் தாசில்தார் தனபதியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தாழநல்லூர் கிராமத்தில் உள்ள குளத்தின் கரையோரம் தென்னை, மா, ஆலமரம், அரசமரம், இலுப்பை மரம் என பலவகையான மரங்கள் உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரில் குளத்தின் கரையோரம் உள்ள அனைத்து மரங்களையும் சிலர் வெட்டி வருகிறார்கள். இதற்கு துணையாக கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செயல்படுவதால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம் அதிக மரங்களை நட வேண்டும் என்று அறிவித்துள்ளது.

தமிழக அரசு மரங்களை வெட்டக்கூடாது, ஒரு கோடி புதிய மரக்கன்றுகளை நடவேண்டும் என்று புதிய ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் பொறுப்பற்ற முறையில் குளத்தின் கரையோரம் இடையூறு இல்லாமல் நின்ற மரங்களை வெட்டி அகற்றி வருவது அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

எனவே வருவாய்த்துறையினர் உடனடியாக தலையிட்டு மரங்களை வெட்டாமல் அவற்றை பாதுகாக்க வேண்டும். மரங்களின் மீது வரிசை எண்களை குறித்து பொதுப்பணித்துறையின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும்.

இவ்வாறுஅந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் தனபதி இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதை ஏற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %