கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த பெரியகாப்பான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் சிவக்குமார்(வயது 37). இவரது மனைவி சீதா இவர்களுக்கு கீதா, கிருத்திகா ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் சிவக்குமார், அவ்வப்போது மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தந்தை பரமசிவத்திடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்தில் பரமசிவம்(61) புகார் கொடுத்தார். ஆனாலும் சிவக்குமார் மீண்டும் மீண்டும் பரமசிவத்திடம் பணம் கேட்டு தகராறு செய்து அவரை கொடுமைப்படுத்தி வந்தார்.
கடந்த 5-8-2019 அன்று இரவு மதுகுடித்துவிட்டு வந்த சிவக்குமார் பரமசிவத்திடம் மது குடிக்க 500 ரூபாய் தருமாறு கேட்டார். ஆனால் பரமசிவம் பணம் தர மறுத்ததால் அவரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பரமசிவம் தனது மகன் என்றும் பாராமல் சிவக்குமாரை கீழே நெட்டித் தள்ளி அருகில் கிடந்த கான்கிரீட் கல்லை தூக்கி அவரது தலையில் போட்டார். இதில் தலை நசுங்கி சிவக்குமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரமசிவத்தை கைது செய்தனர். இந்த வழக்கு விருத்தாசலம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததை அடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் குற்றம் சாட்டப்பட்ட பரமசிவத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பிரபா சந்திரன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் விஜயகுமார் ஆஜரானார். மதுகுடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த வாலிபரை கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.