மின் இணைப்பு வழங்க தடையில்லா சான்று வழங்கக்கோரி இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, பந்தநல்லூர் கிராமத்தில் பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகை எடுத்த விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு பெற தடையில்லா சான்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வழங்கப்படாததால் மின் இணைப்பு பெற முடியவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த விவசாயிகள், இலவச மின் இணைப்பு பற தடையில்லா சான்று வழங்கக்கோரி பந்தநல்லூர் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி, நேற்று காலை மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சாைல மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், தாசில்தார் மகேந்திரன், விவசாயிகள் சார்பில் தி.மு.க. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குத்தாலம் கல்யாணம் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது விவசாயிகள் தரப்பில், பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நில குத்தகைதாரர்களுக்கு இலவச மின்இணைப்பு பெற தடையில்லா சான்றினை இந்து சமய அறநிலையத்துறை உடனே வழங்க வேண்டும்.
காலதாமதமின்றி விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும். கோவில் நிலங்களில் குடியிருக்கும் குடிசை வீடுகளுக்கு மின் இணைப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெற்று கலைந்து சென்றனர்.