விருத்தாசலம், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் டிரோன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி நடந்தது. இதற்கு சென்னை நபார்டு வங்கி முதன்மை பொது மேலாளர் வெங்கடகிருஷ்ணா தலைமை தாங்கினார்.
விருத்தாசலம், வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் வரவேற்று திட்டத்தின் நன்மைகள் குறித்து விளக்கி பேசினாா். கடலூர் நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் விஜய் நிஹார் கலந்து கொண்டு நபார்டு வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் டிரோன் திட்டம் குறித்தும் அதன் நோக்கங்கள் குறித்தும் விளக்கி பேசினார்.
மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் சுப்பிரமணியன் டிரோனின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார். இதில் தக்ஷா ஆளில்லா விமான அமைப்பு நிறுவனத்தை சேர்ந்த டிரோன் பயிற்சி பெற்ற தொழில்நுட்ப உதவியாளர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி அளித்தனர்.
நிகழ்ச்சியில் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், விஞ்ஞானிகள், உதவி வேளாண் இயக்குனர்கள், தேசிய வேளாண் திட்ட அலுவலர்கள், இப்கோ நிறுவனத்தை சேர்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கூறுகையில் விவசாயிகளுக்கு பயிற்சிகள் முடிந்தவுடன், அவர்களின் பயன்பாட்டிற்காக குறைந்த விலையில் டிேரான் வாடகைக்கு விடப்படும். விவசாயிகள் இச்சேவையினை பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் ஆட்பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினை தீர்க்கப்படும் என்றார்.