கடலூர், பண்ருட்டி திருவதிகையை சேர்ந்தவர் பாலு (வயது 60), தொழிலாளி. இவர் சம்பவத்தன்று, ‘ஹலோ சீனியர்’ காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். அந்த புகாரில், தனது மனைவி ஜெயலட்சுமி, மகன் வடிவேல் ஆகியோர் தன்னுடைய சைக்கிள் மற்றும் ½ பவுன் நகையை பிடுங்கி வைத்துக்கொண்டனர்.
மேலும் தன்னை வீட்டை விட்டு அவர்கள் வெளியே துரத்திவிட்டனர். அதனால் எனது மனைவி மற்றும் மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதுபற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி பண்ருட்டி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் பண்ருட்டி சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், பாலு மற்றும் அவரது குடும்பத்தினரை அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது அவரது மனைவி மற்றும் மருமகள் ஆகியோர் பாலு தங்குவதற்கு தனியாக ஒரு வீடு கொடுப்பதாகவும், இனிமேல் எந்தவொரு பிரச்சினையும் செய்ய மாட்டோம் என்றும் கூறினர்.
இதையடுத்து போலீசார், இனி பாலுவுடன் தகராறில் ஈடுபட்டதால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி, அவரது மனைவி மற்றும் மருமகளை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.