மயிலாடுதுறை, பா.ஜ.க. மாநில வக்கீல் அணி பிரிவு தலைவர் ராஜேந்திரன், திருச்சி கோட்ட ரயில்வே பொது மேலாளருக்கு மயிலாடுதுறை ரயில் நிலைய மேலாளர் சங்கர்குரு வழியாக ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவிலுக்கு ஆண்டுதோறும் சித்திரை கடைசி செவ்வாய் அன்று நடைபெறும் விழாவில் பங்கேற்க சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பாத யாத்திரையாக வருகின்றனர்.
அவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்று விட்டு மறுநாள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். வழக்கம்போல, இந்த ஆண்டும் 24-ந் தேதி காரைக்குடி பகுதியில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரை தொடங்கி வைத்தீஸ்வரன் கோவிலை வந்தடைகிறார்கள்.
அவர்கள் 25-ந் தேதி நடைபெறும் பூஜைகளில் கலந்துகொண்டு 26-ந் தேதி சொந்த ஊர் செல்கின்றனர். மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவில் விழாவில் பங்கேங்கின்றனர். ஆகவே, திருச்சி, புதுக்கோட்டை வழியாக காரைக்குடியை சென்றடையும் வகையில் வருகிற 26-ந் தேதி காலை 11 மணிக்கு வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து இருந்து சிறப்பு ரயில் ஒன்றை இயக்க ஏற்பாடு செய்து தர வேண்டும்.
அந்த ரெயில் நமணசமுத்திரம், செட்டிநாடு மற்றும் கோட்டையூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. அப்போது பா.ஜ.க. மாவட்டத் தலைவர் வெங்கடேசன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் ஆகியோர் உடன் இருந்தனர்