பொறையாறு, மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே இளையாளூர் ஊராட்சி, வடகரையில் கடந்த 1957-ம் ஆண்டு வடகரை ஜமாத்தார்களால் அரசுக்கு தானமாக வழங்கப்பட்ட இடத்தில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு பெருந்தலைவர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த துணை சுகாதார நிலையம் கடந்த 1990-ம் ஆண்டு வரை செயல்பட்டது.
அதன்பிறகு, 1996-ம் ஆண்டு பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
தற்போது இந்த சுகாதார நிலைய கட்டிடம் மிகவும் பழுதடைந்து இடியும் தருவாயில் உள்ளது. இந்த கட்டிடத்தை புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல, பொறையாறு அருகே சந்திரபாடி மீனவ கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடமும் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் இப்பகுதி மக்கள் பெரிதும் பயன்பெற்று வந்தனர்.
தற்போது ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டுமென்றால் 10 கி.மீ. தூரமுள்ள மயிலாடுதுறைக்கோ அல்லது செம்பனார்கோவிலுக்கோ தான் செல்ல வேண்டியுள்ளது. மேலும், விபத்துகள் ஏற்படும் போது காயம் அடைந்தவர்களை இங்கிருந்து அங்கு கொண்டு செல்வதற்குள் உயிரிழக்கும் நிலை உள்ளது.
இந்த 2 ஊராட்சிகளிலும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் இல்லாததால் பெண்களுக்கு கர்ப்ப கால பராமரிப்பு, பிரசவத்திற்கு பின் பராமரிப்பு, பச்சிளம் குழந்தை பராமரிப்பு, தடுப்பூசி போடுதல், வளர் இளம் பருவத்தினர் பராமரிப்பு, கொரோனா தடுப்பூசி செலுத்துதல், நோயாளிகளை பரிசோதித்து மருந்து-மாத்திரைகள் வழங்குதல் போன்ற பணிகளில் கிராம செவிலியர்கள் மிகவும் சிரமத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆகவே, பழுதடைந்த இந்த கட்டிடங்களை இடித்து விட்டு புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த 2 ஊராட்சி பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.