கடலூர் மாவட்டம், ஶ்ரீமுஷ்ணம் தாலுகா வலசக்காடு வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் கலையரசன் (வயது 40). இவருடைய மனைவி சாந்தி (39). இவருக்கும் கலையரசன் தம்பி பாலமுருகன் (32) என்பவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 20.9.2017 அன்று சொத்து தகராறு காரணமாக சாந்தி மற்றும் அவரது உறவினர்கள் சாமிதுரை (47), ராமலிங்கம் (60), வேலுமணி (31) ஆகிய 4 பேரும் சேர்ந்து பாலமுருகனை கட்டையால் தாக்கி கொலை செய்தனர்.
இதுகுறித்து பாலமுருகனின் தந்தை கோவிந்தசாமி சோழத்தரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு சிதம்பரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி செம்மல் தீர்ப்பு வழங்கினார். அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் சாந்தி, சாமிதுரை, ராமலிங்கம், வேலுமணி ஆகிய 4 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மனோகர் ஆஜரானார்.