மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு வ.உ.சி. தெருவில் வசித்து வந்தவர் சுரேஷ் (வயது 42). ஜவுளிக்கடை மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர், கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ந் தேதி இரவு 10.20 மணியளவில் கூறைநாடு பகுதியில் உள்ள தனது ஜவுளிக்கடையை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
வீட்டின் அருகே அவர் சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்தனர்.
இந்த கொலை தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரை கைது செய்தனர். இந்த கொலை வழக்கு மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த கொலை வழக்கு விசாரணை காலகட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் இறந்து போனதால் மீதமுள்ள மயிலாடுதுறையை சேர்ந்த சசிக்குமார், சிறுத்தை சிரஞ்சீவி, புழல் சிறையில் தண்டனை கைதியாக உள்ள மயிலாடுதுறையை சேர்ந்த கபிரியேல், பண்டாரவாடையை சோ்ந்த கலைவாணன், திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த கலைவாணன், விஜய், மணிகண்டன் ஆகிய 7 பேர் மீது வழக்கு விசாரணை நடந்தது.
கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்த கொலை வழக்கு விசாரணை முடிந்து நேற்று முன்தினம் மாலை தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனையொட்டி, குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அப்போது மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி பன்னீர்செல்வம், இந்த வழக்கில் சரியான சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.