விருத்தாசலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாஞ்சில் சம்பத் காரில் வந்தார். விருத்தாசலம் புறவழிச்சாலையில் வந்தபோது அவரது காரை கடலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மணிகண்டன் தலைமையில் நிர்வாகிகள் மறித்தனர். மெதுவாக வந்த காரை பா.ஜ.க.வினர் தங்களது கையால் தாக்கினர்.
அப்போது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோரை அவதூறாக பேசிய நாஞ்சில் சம்பத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பா.ஜ.க.வினரை தடுத்தனர். இதையடுத்து நாஞ்சில் சம்பத் வந்த கார் வேகமாக சென்றது. இதனிடையே நாஞ்சில் சம்பத் வந்த கார், பா.ஜ.க. நிர்வாகி கல்கிராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறி பா.ஜ.க.வினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர்.
இதையடுத்து கல்கிராஜ் மீது மோதிவிட்டு காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்ற டிரைவர் மீதும், நாஞ்சில் சம்பத் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.