ஆலந்தூர், சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை, துபாய் ஆகிய நாடுகளுக்கு விமானம் செல்ல இருந்தது. முன்னதாக அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த 4 பேர் துபாய்க்கும், 5 பேர் கொழும்புக்கும் செல்ல வந்திருந்தனர். 9 பேரையும் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். அவர்களது உடைமைகளை சோதனை செய்தபோது, அவர்களின் கைப்பைகளில் ரகசிய அறை வைத்து தைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.
மேலும் அவர்களது உள்ளாடைக்குள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர், சவுதி ரியால் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. 9 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 95 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
இது தொடர்பாக சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த அஸ்ரப் அலி, நாகப்பட்டினத்தை சேர்ந்த விக்னேஷ் ஆகியோரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், மற்றவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
அதேபோல் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த புதூரை சேர்ந்த ரகமத்துல்லா (35) என்பவரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அவரது உடமைகளை சோதனை செய்தபோது அதில் பெண்கள் பயன்படுத்தும் மணிபர்சு மற்றும் வாசனை திரவியம் ‘ஸ்பிரே’ ஆகியவற்றில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
மேலும் வெளிநாட்டு சிகரெட்டுகள், லேப்டாப்கள் ஆகியவையும் இருந்தன. அவரிடம் இருந்து ரூ.43 லட்சத்து 92 ஆயிரம் மதிப்புள்ள 715 கிராம் தங்கம், சிகரெட்டுகள், மின்சாதன பொருட்களை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், ரகமத்துல்லாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.