கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், கடலூர் வேளாண்மை இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு வந்திருந்த விவசாயிகள் அனைவரும் திடீரென கலெக்டரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தாங்கள் பட்டா மாற்றம் செய்து தரக்கோரி விண்ணப்பித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும், இதுவரை அதிகாரிகள் பட்டா மாற்றம் செய்து தராமல் அலைக்கழித்து வருகின்றனர்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மாவட்ட கலெக்டர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் முறையாக பதில் அளிப்பதில்லை. குறைகேட்பு கூட்டத்தில் கோரிக்கை விடுத்தாலும், நடவடிக்கை எடுக்கப்படும் என கூறுகிறார்களே தவிர, அதை செயலில் காட்டுவதில்லை. முன்பு விவசாயிகளின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வந்தது.
ஆனால் சமீபகாலமாக எவ்வித கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. மேலும் குறைகேட்பு கூட்டத்திற்கு வரும் விவசாயிகளை பேச அனுமதிப்பதில்லை என குற்றஞ்சாட்டினர். அதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம், பட்டா மாற்றம் செய்து தர நடவடிக்கை எடுப்பதுடன், அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
பின்னர் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
பேரூர் குஞ்சிதபாதம்:- கரும்பு சாகுபடி தொடங்க இருக்கும் வேளையில் தற்போது தொடர் மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தடையின்றி மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் மாதவன்:- அடிக்கடி ஏற்படும் மின்தடையால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறது. தேர்வுக்கு படிக்கும் மாணவர்களும் பாதிக்கக் கூடிய நிலை உள்ளதால், மின்வெட்டை சரி செய்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அயன்குறிஞ்சிப்பாடி ராமலிங்கம்:- வடக்கு அயன்குறிஞ்சிப்பாடியில் தாழைவாய்க்காலின் குறுக்கே உள்ள தரைப்பாலம் கடந்த 10 ஆண்டுகளில் 22 முறை உடைந்துள்ளது. அதனால் அந்த வாய்க்காலின் குறுக்கே பாலம் தரமாக கட்ட வேண்டும். சித்தேரி கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை தூர்வார வேண்டும் என்றார்.
விவசாயிகள் கூட்டமைப்பு ரவீந்திரன்:- விளைநிலங்களை வீட்டுமனைகளாக விற்பனை செய்யும் போது வாய்க்கால் ஆக்கிரமிக்கப்படுகிறது. மாவட்டத்தில் ரூ.55 கோடியில் ஏரிகள் தூர்வாரப்பட்டதாக என்.எல்.சி. நிர்வாகம் கூறுவதில், விவசாயிகளுக்கு உடன்பாடில்லை. எனவே, இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.
சிதம்பரத்தில் நடக்கும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றார்.
அதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயக்குமார் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.