சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில், தடம் புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அலுவலகம் செல்வோர், கல்லூரி மாணவ, மாணவிகள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த புறநகர் ரெயிலில் பயணித்து வருகின்றனர். இது மக்களின் மிக முக்கிய போக்குவரத்தாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்வதற்காக மின்சார ரயில், பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்துக்கு மாலை 4.25 மணிக்கு முதலாவது நடைமேடையை நோக்கி வந்து கொண்டிருந்தது.
ரயிலை சங்கர் என்பவர் இயக்கினார். திடீரென ரயில் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த நடைமேடையில் ஏறி கட்டிடத்தில் மோதி நின்றது. இந்த சம்பவத்தின் போது நடைமேடை அருகில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.
விபத்தில் ரயிலின் ஓட்டுநர் காயமடைந்ததோடு, இரண்டு பெட்டிகள் சேதமடைந்தன. மேலும் நடைமேடையில் இருந்த கடைகளும் சேதமடைந்தன. ரயிலில் பிரேக் பிடிக்காததால் விபத்து நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரனையில் தெரிய வந்துள்ளது. ரயில்வே போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் பொதுமக்கள் அனுமத்திக்கப்படவில்லை.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பயணிகள் கூட்டம் வார நாட்களை விட சற்று குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது