ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு உரிய கவுன்சிலிங் வழங்கி நல்வழிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை, பள்ளி பாதுகாப்பு இயக்கம் சார்பில் உலக புத்தக நாள் பெருவிழா இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சிவராசு, மேயர் அன்பழகன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனர் சுதன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால முரளி, கல்லூரி முதல்வர் பால் தயாபரன், தலமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், நூலக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், பள்ளி கல்வித்துறை மற்றும் பள்ளி பாதுகாப்பு இயக்கம் இணைந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆயிரம் இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு புத்தகங்களை வழங்க சிறிய நூலகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
இன்று திருச்சியில் துவங்கியுள்ள இந்த திட்டம் முன்னோடி திட்டமாக எடுத்துக்கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள 1 லட்சத்து 80 ஆயிரம் மையங்களுக்கும் இதனைச் செயல்படுத்த வேண்டும் என்று கே.என் கேட்டுக் கொண்டுள்ளார் – கண்டிப்பாக இதனை அனைத்து இடங்களிலும் செயல்ப்டுத்துவோம் என்ற உறுதிமொழியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல்வேறு இடங்களில் மாணவர்கள் ஆசிரியர்களை தாக்கும் சம்பவம் அதிகரித்து வருவதாக கூறிய அவர், இவ்வாறு ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு உரிய கவுன்சிலிங் வழங்கி அவர்களை நல்வழிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.