புதுப்பேட்டை சேத்தியாத்தோப்பு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்
புதுப்பேட்டை அருகே வீரப்பெருமாநல்லூர் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
இதில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க புதுப்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதேபோல் சேத்தியாத்தோப்பை அடுத்த அள்ளூர் கிராமத்தில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோவிலில் 21-ம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முன்னதாக சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.