0 0
Read Time:3 Minute, 28 Second

கடலூர் அருகே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இரும்பு பொருட்களை திருடிய 50 பேர் கொண்ட கும்பல், காவலாளிகளை கண்டதும் 28 வாகனங்களை நிறுத்திவிட்டு தப்பி ஓடியது.

சிதம்பரம், கடலூர் அருகே புதுச்சத்திரம் பெரியகுப்பம் கிராமத்தில் என்.ஓ.சி. என்ற தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு தாக்கிய தானே புயலுக்கு பிறகு இந்த ஆலை செயல்படவில்லை. ஆலையின் பயன்பாட்டுக்கான இரும்பு உள்ளிட்ட தளவாட பொருட்கள் ஆலை வளாகத்தில் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இ்ங்கு கடலூர் வண்ணாரப்பாளையம் கே.டி.ஆர்.நகரை சேர்ந்த கண்ணன்(வயது 68) என்பவர் தொழில்முறை ஆலோசகராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு தொழிற்சாலைக்கு சென்றார். நேற்று அதிகாலையில் ஆலையின் தெற்கு கேட் பகுதியில் சத்தம் கேட்டது.

இதைடுத்து கண்ணன், ஆலை காவலாளிகளுடன் தெற்குகேட் பகுதிக்கு சென்றார். அங்கு 50 பேர் கொண்ட கும்பல் இரும்பு பொருட்களை திருடி கொண்டிருந்தனர். சிலர் திருடிய பொருட்களை மினி லாரி, ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் ஏற்றிக்கொண்டிருந்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலாளிகள், அந்த கும்பலை பிடிக்க முயன்றனர். இவர்களை கண்டதும் அந்த கும்பல், தங்களது வானங்களை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடியது.

இது குறித்து தொழில்முறை ஆலோசகர் கண்ணன் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வினதா, சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் ஆலைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் திருட்டு கும்பல் விட்டு சென்ற மினி லாரி, ஆட்டோ, 26 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த கும்பல் கடந்த சில நாட்களாக ஆலைக்குள் புகுந்து இரும்பு பொருட்களை திருடி வந்ததாகவும், இதுவரை 1,500 டன்னுக்கு மேல் இரும்பு பொருட்களை திருடி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலையில் திருடிய கும்பல் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்தும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் யாருடைய பெயரில் இருக்கிறது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %