கடலூா் மாவட்ட பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த திருநங்கைகள் சிலா் திடீரென ஆட்சியா் அலுவலகம் முன் புதுவை – செம்மண்டலம் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் கடலூா் புதுநகா் காவல் ஆய்வாளா் தி.குருமூா்த்தி பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
அப்போது, திருநங்கைகள் தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மனு அளித்து நீண்ட நாள்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படாததால் சாலை மறியலில் ஈடுபட்டதாக தெரிவித்தனா். பின்னா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். அதில் தெரிவித்துள்ளதாவது:
திருநங்கைகளுக்கு வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு கேட்டு தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியருக்கு தொடா்ந்து மனு அளித்து வருகிறோம். ஆனால், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களது மனுவின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து திருநங்கைகளின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவித்தனா்.