பெண்ணாடம் அடுத்த கிளிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம் மகன் ராமசாமி (வயது 48), விவசாயி. இவர் நேற்று தனது கூரை வீட்டின் அருகில், அரசால் வழங்கப்பட்ட தொகுப்பு வீடு ஒன்றை கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டியுள்ளார். அப்போது குழியில் ஏதோ ஒரு மண் தாழி கடப்பாரையில் தட்டுப்பட்டுள்ளது.
தொடர்ந்து அதனைத் தோண்டி எடுத்து பார்த்தபோது, அதில் செம்பு உலோகத்திலான 10 வளையல்கள் மற்றும் நகர் படுக்கை திசையில் கிருஷ்ணர் உருவம் கொண்ட உலோக சிலை ஒன்று இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராமசாமி, இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் அங்கு வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமேனி, ரவிக்குமார் மற்றும் போலீசார் சிலை மற்றும் உலோக பொருட்களை கைப்பற்றி கிராம நிர்வாக அலுவலர் துரைராஜிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், சிலை மற்றும் உலோக பொருட்களை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, இது எந்தவிதமான உலோகத்தால் செய்யப்பட்டவை, எத்தனை வருடங்களுக்கு முன்பு செய்யப்பட்டவை உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்த பின்புதான் முழு விவரம் தெரியவரும் என்றனர்.