மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஊராட்சி ஒன்றியம், திட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து குளங்கரை ஏ.என்.எஸ்.நகரில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி, கற்பகம் நகர் 4-வது தெருவில் சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்தி கூடுதலாக மின்கம்பம் அமைத்து தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து சட்டநாதபுரம் ஊராட்சிக்குட்பட்ட உப்பனாறு ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள மக்கும் மற்றும் மக்காத குப்பை தரம் பிரிக்கும் இடத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், கூப்பிடுவான் உப்பனாறு அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் மயான கொட்டகை உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.
இதேபோல, திருவாலி ஊராட்சியில் பாரத பிரதமரின் வீடு கட்டும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது அவர், சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 37 ஊராட்சிகளில் கட்டப்படும் 1,601 வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதனையடுத்து அதே ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை பார்வையிட்டார். பின்னர் அரசினர் நடுநிலைப் பள்ளிக்கு திடீரென சென்ற கலெக்டர் அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். பின்னர் சத்துணவு கூடத்திற்கு சென்ற அவர், அங்கு உணவின் தரத்தை சாப்பிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், திருநகரி ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் போடப்பட்டு வரும் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சட்டநாதபுரம் ஊராட்சி சூரக்காடு அரசினர் பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டார்.
இ்ந்து ஆய்வின்போது ஆணையர்கள் இளங்கோவன், அருள்மொழி, என்ஜினீயர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், சாலை ஆய்வாளர் பிரியா, ஊராட்சி செயலர் அன்பரசன் உள்பட பலர் உடனிருந்தனர்.