குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்தில் பட்டா மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர், கிராம உதவியாளர் ஆகிய 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அண்ணாநகரை சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 35). இவர் தன்னுடைய தாய் பெயரில் இருந்த நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்தில் உள்ள சர்வேயர் சிவதங்கராசுவிடம் மனு அளித்துள்ளார்.
அதற்கு அவர் ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத நீலகண்டன் இதுபற்றி, கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாலா, திருவேங்கடம் மற்றும் போலீசார் சர்வேயரை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து அவர்கள் கூறிய அறிவுரைபடி ரசாயனம் தடவிய ரூ.6 ஆயிரத்தை நீலகண்டன் இன்று குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்தில் இருந்த சிவதங்கராசுவிடம் கொடுக்க சென்றார்.
அப்போது அங்கிருந்த அவர், அந்த பணத்தை கிராம உதவியாளர் ஆனந்தன் (56) என்பவரை வாங்குமாறு கூறியதாக தெரிகிறது. இதையடுத்து நீலகண்டனிடம் இருந்து ரூ.6 ஆயிரத்தை ஆனந்தன் வாங்கி, சிவதங்கராசுவிடம் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்து இருந்து கண்காணித்த கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார், அவர்கள் 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தாலுகா அலுவலகத்தில் சர்வேயர், கிராம உதவியாளர் ஆகிய 2 பேரும் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.