விருத்தாசலம் அருகே, உள்ள விசலூர் கிராமத்தில் சுமார் 68 ஏக்கர் பரப்பளவில் கிசா ஏரி அமைந்துள்ளது. விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை இடையே தொழில் தட சாலை அமைக்கும் திட்டத்திற்காக, இந்த ஏரியில் இருந்து மண் அள்ளப்பட்டு சாலை பணிக்கு பயன்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த அப்பகுதி மக்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலா தலைமையில் திடீரென ஏரியில் மண் அள்ளும் பணியை நேற்று தடுத்து நிறுத்தினர். பின்னர் அவ்வழியாக வந்த லாரிகளை சிறைபிடித்து, சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த மங்கலம்பேட்டை போலீசார் மற்றும் துணை தாசில்தார் சாந்தி விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், எங்கள் ஊர் மக்களின் பயன்பாட்டிற்கு தேவைப்படுவதால், ஏரியில் உள்ள மண்ணை அள்ளக்கூடாது.
மேலும் அனுமதிக்கப்பட்ட அளவை விட ஏரியில் ஆழமாக வெட்டி மண் எடுப்பதால், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் போது அங்கு குளிப்பவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்து விடும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. மேலும் தற்போது சாலை அமைக்கும் பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் மண் எடுக்காமல், 5 கி.மீட்டர் தூரத்தில் உள்ள எங்கள் கிராமத்தில் எதற்காக மண் எடுக்க வேண்டும் என்றனர்.
அதற்கு போலீசார் மற்றும் துணை தாசில்தார் சாந்தி, மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று தான் ஏரியில் மண் எடுக்கப்படுகிறது என கூறினர். இருப்பினும் அதனை ஏற்றுக் கொள்ளாத பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள், மீண்டும் ஏரியில் மண் அள்ளும் பணி தொடர்ந்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறிவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.