திருவாரூர், கடைகள், உணவு நிறுவனங்களில் உள்ள பெயர் பலகைகளில் தமிழ் மொழியில் பெயர்கள் இருத்தல் வேண்டும் என திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு தமிழ் மொழியை வளர்ப்பதை குறிக்கோளாக கொண்டு திட்டம் வகுத்து செயலாக்கி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் பெயர் பலகையில் தமிழுக்கு முதலிடம் அளிக்கப்பட வேண்டும்.
1947-ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள்- நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகள்-1958-ம் ஆண்டு தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் முறையே கடைகள், நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் உள்ள பெயர் பலகைகளில் தமிழ் மொழியில் பெயர்கள் இருத்தல் வேண்டும்.
பிற மொழிகளில் இருக்க வேண்டும் எனில் ஆங்கிலத்தில் அடுத்தபடியாகவும் இருத்தல் வேண்டும். பெயர் பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் மற்ற மொழிகளில் உள்ள எழுத்துக்களை விட அதிகமான இடத்தினை கொண்டிருக்க வேண்டும். தமிழ் எழுத்துக்கள் சீர்திருத்த எழுத்துக்களை கொண்டிருக்க வேண்டும்.
எனவே அனைத்து கடைகள் நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களிலும் மேற்குறிப்பிட்டவாறு பெயர்பலகை வைப்பதற்கு நடவடிக்கை எடுத்து செயல்படுத்துமாறும், அவ்விதம் பெயர் பலகை வைத்தல் குறித்த சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லையெனில், தமிழ்நாடு கடைகள் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் அல்லது உணவு நிறுவனங்கள் சட்ட விதிமீறல்களுக்கு சட்ட பூர்வ வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.