கடலூர் அருகே, உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 35), போக்குவரத்து போலீஸ்காரர். இவர் நேற்று முன்தினம் மாலை சிதம்பரம் படித்துறை இறக்கம் சந்திப்பில் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், தனது மோட்டார் சைக்கிளை மர்மநபர் ஒருவர் திருடிச் செல்வதாகவும், அவரை உடனே பிடிக்கும்படி கூறியுள்ளார். இதையடுத்து அந்த வாலிபர் கூறிய மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிரகாஷ் வழிமறித்தார். பின்னர் அவரிடம் விசாரித்தார்.
இதில் ஆத்திரமடைந்த அந்த நபர், பிரகாசை ஆபாசமாக திட்டி தாக்கினார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காண்பித்து கொலை மிரட்டல் விடுத்து விட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றார்.
இதில் சுதாரித்துக் கொண்ட பிரகாஷ், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை மடக்கி பிடித்து சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சிதம்பரம் இடையான் பால்சேரியை சேர்ந்த ஜாண்சன் மகன் அபினாஷ் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். போலீஸ்காரரை வாலிபர் ஒருவர் தாக்கிய சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.