சென்னை, திராவிடர் கழகம் சார்பில், சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பு போராட்டம் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் அக்கட்சியினர் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திரண்டனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் தார் சட்டியை கி.வீரமணியிடம் வழங்கி போராட்டத்திற்கான பேரணியை தொடங்கி வைத்தார்.
அப்போது கி.வீரமணி திராவிடர் கழகத் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:-
இந்தி எழுத்தை அழிப்பதன் மூலம் கலாசார, பண்பாட்டு திணிப்பை நாம் எதிர்க்கிறோம். இந்த கலாசார திணிப்புக்கு எதிரான போராட்டம் பெரியார் காலத்தில் தொடங்கி இன்று வரை தேவைப்படுகிறது. இந்த மண் காவி மண் அல்ல. பெரியார் மண். இந்த மண் கலாசார பண்பாட்டு திணிப்பை ஒருபோதும் ஏற்காது என்பதற்கு அடையாளமாக இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில், மக்கள் தங்கள் மொழி, கலாசாரம், பண்பாடு, உரிமையை காப்பாற்றுவது அடிப்படை உரிமை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இந்தி தெரியாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற அளவிற்கு ஆணவம் வளர்ந்துவிட்டது.
பெரியார் தொடங்கிய போராட்டம் ஒரு போதும் தோற்றது இல்லை. கல்வித்துறை, ஆட்சித்துறையில் இந்தியை திணிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு எதிராக இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. இது ஒரு தொடர் போராட்டம் ஆகும். வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்.
அதைத்தொடர்ந்து, திராவிடர் கழக துணைத்தலைவர் கலி பூங்குன்றன், பொதுச் செயலாளர்கள் துரை சந்திரசேகர், ரா.ஜெயக்குமார், வீ.அன்புராஜ், மாநில அமைப்பு செயலாளர் ரா.குணசேகரன், பொருளாளர் குமரேசன், துணை பொதுச்செயலாளர் இன்ப கனி, மாநில இளைஞர் அணி செயலாளர் இளந்திரையன், மாநில மாணவர் அணி செயலாளர் பிரின்ஸ், மாநில வக்கீல் அணித் தலைவர் வக்கீல் வீரசேகரன் உள்ளிட்ட திராவிடர் கழகத்தினர் ஈ.வி.கே.சம்பத் சாலை, ஈ.வெ.ரா.பெரியார் சாலை, காந்தி இர்வின் சாலை வழியாக பேரணியாக நடந்து எழும்பூர் ரெயில் நிலையத்தை நோக்கி சென்றனர். அவர்களை தாளமுத்து நடராஜன் சிலை அருகே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் எழும்பூர் தமிழ் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில அடைத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.