மயிலாடுதுறை பட்டின பிரவேச விழாவில் பல்லக்கு தூக்க விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் ஆன்மிக சமய பேரவை பாதுகாப்பு தலைவர் செந்தில்வேல் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறும் பட்டின பிரவேச விழா பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அப்போது ஆதீனத்தை பல்லக்கில் அமரவைத்து தோளில் சுமந்து செல்வது வழக்கம். இது ஆதீனத்தின் குருவிற்கு சீடர்கள் செய்யும் தலையாய கடமைகளில் ஒன்று. சைவ சமயகுரவர்கள் நால்வரில் ஒருவரான அப்பர் பெருமான் காலத்தில் இருந்தே சைவர்கள் பல்லக்கு சுமப்பது என்பது நடைமுறையில் உள்ளது.
எனவே பல்லக்கு தூக்க விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து, தொன்று தொட்டு நடக்கும் நிகழ்வு தொடர்ந்து தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அப்போது அமைப்பின் நிர்வாகிகள் பண்ணை சொக்கலிங்கம், வக்கீல் ராஜேந்திரன், பாண்டுரங்கன், சிவலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.