மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது. அப்போது மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர். இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 22 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 18 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 14 மனுக்களும் என மொத்தம் 110 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். பின்னர், தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்திய “தீராக்காதல் திருக்குறள்” குறளோவியம் ஓவியப்போட்டியில் ஊக்கப் பரிசுப் பெற்ற 3 பள்ளி மாணவர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், வருவாய் துறையின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலமாக 10 பேருக்கு ஓய்வூதியத்திற்கான ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், உதவி ஆணையர் (கலால்) நரேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.