மாணவர்கள் சாதி அடையாளத்தைக் குறிப்பிடும் வகையில் கைகளில் வண்ணக் கயிறு கட்டுவதைத் தடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு தேனி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பள்ளி மாணவர்கள் பல வண்ணங்களில் கைகளில் கயிறு அணிந்து தங்களின் சாதியை அடையாளப்படுத்துவதாகவும், அதன் மூலம் பல சாதிக்குழுக்களாக பிரிந்து இயங்குவது தெரியவந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற சாதிப்பாகுபாடு கயிறுகளால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும் என்றும், சாதிப்பிரிவினையைத் தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களை எச்சரிக்க வேண்டும் என்றும், முதன்மைக்கல்வி அலுவலர் செந்தில் வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு முன்பு, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அரசு பள்ளியில் மாணவர்களிடையே சாதி கயிறு கட்டுவதால் ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர்கள் சாதி மோதல்களில் ஈடுபடுவது வருத்தம் அளிப்பதாக கூறினார். மாணவர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது, இது மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் கட்டாயத்தில் பள்ளிக்கல்வித்துறை உள்ளது என்றார்.
மேலும், கடந்த காலத்தில் தென்மாவட்டங்களில் இதுமாதிரியான சாதி மோதல்கள் இருந்து வந்தது. தற்போது படிப்பறிவு அதிகரித்த நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது, திருநெல்வேலியில் சாதி கயிறு கட்டியதில் ஏற்பட்ட மோதலில் மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். அனைவருக்கும் சமத்துவமான அரசாக இந்த அரசு இருந்து வருவதாகவும், இதனால் மாணவர்கள் சமத்துவத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் இதுபோன்ற சம்பவங்களில் மாணவர்கள் ஈடுபடாமல் இருப்பதற்கு அவர்களுக்கு உரிய கவுன்சிலிங் வழங்கப்படும் என்றும் அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார்.