தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் ஒராண்டு நிறைவடைவதையொட்டி, புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். பதவி ஏற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைவதையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தவுள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்களின் வாழ்த்துக்களை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் தலைமைச் செயலக வடிவில் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலக வாயில்களில் வாழைத் தோரணங்கள் கட்டி மலர் அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுக பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் பாராட்டு தெரிவித்துள்ளார். திராவிட இயக்க வரலாற்றில், முதன் முதலாக ஆட்சிக்கு என்று ஒரு முறையை, அதுவும் ‘திராவிட மாடல் ஆட்சி முறை’ என்று ஒன்றை உருவாக்கிய முதலமைச்சர் ஸ்டாலினின் பெயர் தமிழ்நாட்டு வரலாற்றில் துருவ நட்சத்திரமாக என்றும் திகழும் எனவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.