கடலூரில் இருந்து பரங்கிப்பேட்டை வழியாக சிதம்பரத்திற்கு தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை 7 மணியளவில் தனியார் பஸ் ஒன்று சிதம்பரத்துக்கு புறப்பட்டது.
அந்த பஸ்சில் பரங்கிப்பேட்டையை சேர்ந்த பயணிகள் ஏறினர். அப்போது பஸ் இருந்த டிரைவர், கண்டக்டர் இந்த பஸ் பரங்கிப்பேட்டை செல்லாது எனக்கூறி பயணிகளை இறக்கிவிட்டனர்.
இதையடுத்து பயணிகள் வேறொரு பஸ்சில் பரங்கிப்பேட்டை வந்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று மாலை 4 மணியளவில் அதே பஸ் கடலூரில் இருந்து சிதம்பரம் செல்வதற்காக பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்துக்கு வந்தது. இதுபற்றி அறிந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அந்த பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் காலையில் பயணிகளை இறக்கிவிட்ட சம்பவம் குறித்தும், பஸ் தினசரி பரங்கிப்பேட்டை வந்து செல்ல வேண்டும் என்று கூறியும் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பஸ் தினசரி பரங்கிப்பேட்டை வந்து செல்லும் என டிரைவர், கண்டக்டர் தெரிவித்தனர்.
இதையேற்ற பொதுமக்கள் பஸ்சை விடுவித்து போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.