திருத்துறைப்பூண்டி அருகே,2 குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களுக்கு திருத்துறைப்பூண்டியில் இருந்து கொள்ளிடம் கூட்டு குடிநீர் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த தண்ணீர் தினமும் கிடைக்காமல் வாரம் ஒருமுறை மட்டுமே கிடைப்பதாகவும், சமீபகாலமாக வாரத்தில் ஒருநாள் கூட கிடைப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும், நெடும்பலம் ஊராட்சிக்கு வினியோகம் செய்யப்படும் தண்ணீரை சிலர் வழியிலேயே திருட்டுத்தனமாக உறிஞ்சி விடுவதாக குற்றம் சாட்டிய அப்பகுதி மக்கள், தினமும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், விரக்தி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் கிளை செயலாளர் அம்பிகாபதி தலைமையில் தூத்துக்குடி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி ஒன்றிய தலைவர் பாஸ்கர், ஒன்றிய ஆணையர் சிவக்குமார், திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது வாகனம் மூலம் உடனடியாக தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் சீராக தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
அதனை ஏற்ற பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.