பண்ருட்டி வள்ளலார் நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 50). இவர் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த சிலர் கண்டரக்கோட்டை அய்யனார் கோவிலில் பூஜை செய்வதற்காக பழனியை அழைத்து சென்றனர். இதையடுத்து பழனி, சாமிக்கு பூஜை செய்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு வந்திருந்த பெண்கள் கோவிலின் வெளிபகுதியில் சாமிக்கு படைப்பதற்காக பொங்கலிட்டனர். இதில் ஏற்பட்ட புகையால் அங்குள்ள ஒரு மரத்தில் கூடு கட்டியிருந்த விஷ குளவிகள் கலைந்து அங்கிருந்த பழனி உள்பட பலரையும் விரட்டி விரட்டி கொட்டியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர்கள் அலறி அடித்து ஓடினர்.
குளவிகள் கொட்டியதில் பலத்த காயமடைந்த பழனி மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். மற்றவர்கள் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.