சிதம்பரம் அருகே, உள்ள பெரியப்பட்டு ஆண்டார்முள்ளி பள்ளத்திலிருந்து நேற்று மாலை 150-க்கும் மேற்பட்ட வைக்கோல் ரோல்களை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி என்று பண்ருட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. பண்ருட்டி பகுதியை சேர்ந்த இருதயராஜ் என்பவர் லாரியை ஓட்டினார்.
பெரியப்பட்டு மெயின்ரோடு அருகே லாரி வந்தபோது சாலையின் குறுக்கே சென்ற மின்கம்பிகள் உரசியதால் வைக்கோல் ரோல்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து உடனடியாக லாரியை டிரைவர் ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கினார்.
பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள், உதவியுடன் லாரியில் இருந்த வைக்கோல் ரோல்களை கீழே தள்ளிவிட்டனர். ஆனாலும் வைக்கோல்ரோல்கள் மளமளவென எரிந்தது.
இதுபற்றிய தகவல் அறிந்து புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினதா தலைமையிலான போலீசாரும், பரங்கிப்பேட்டை தனியார் கம்பெனியில் இருந்த, 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் ஒரே புகை மூட்டம் போன்று காணப்பட்டது.
இந்த தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்ட வைக்கோல் ரோல்கள் எரிந்து சாம்பல் ஆனது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.