0 0
Read Time:6 Minute, 27 Second

கடலூர் அருகே, பெரியக்குப்பத்தில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. 2,800 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலைக்கான கட்டுமான பணி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

இதற்காக பெரிய இரும்பு தளவாட பொருட்கள் மற்றும் தாமிர கம்பிகள் ஆலை வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. கட்டுமான பணிகள் நடந்து வந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு தாக்கிய தானே புயலில் ஆலை கட்டிடங்கள் சேதமானது. அதன்பிறகு அங்கு பணிகள் எதுவும் நடைபெறாமல் கிடப்பிலேயே போடப்பட்டது.

பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஆலையில் வைக்கப்பட்டுள்ளதால் 30-க்கும் மேற்பட்ட காவலாளிகள் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட்டு இரவு பகலாக பாதுகாத்து வருகிறார்கள். ஆலையில் உள்ள தளவாடங்கள் பற்றி அறிந்த கொள்ளையர்கள், தங்களது கைவரிசையை காட்டி வருகிறார்கள்.

கடந்த மாதம் 24-ந் தேதி நள்ளிரவில் 50-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் ஆலைக்குள் புகுந்து இரும்பு, தளவாட பொருட்கள், தாமிர கம்பிகளை திருடினர்.

இது பற்றி அறிந்து அங்கு சென்ற போலீசாரை கண்டதும், கொள்ளையர்கள் தப்பி ஓடினர். அவர்கள் விட்டுச்சென்ற 2 சரக்கு வாகனங்கள், 26 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக 26-ந் தேதி நள்ளிரவில் மற்றொரு கொள்ளை கும்பல் ஆலையில் பொருட்களை திருடி படகில் ஏற்றி, கடல் வழியாக கடத்த முயன்றது. அந்த கும்பலும் போலீசாரை கண்டதும் தப்பி ஓடியது. தொடா்ந்து அந்த ஆலையில் திருட்டு சம்பவம் அரங்கேறி வருகிறது.

இதுவரை அந்த ஆலையில் இருந்து 2 ஆயிரம் டன்னுக்கு மேல் இரும்பு பொருட்கள் திருடுபோயுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் டிரோன் மூலமாகவும் ஆலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆலை கண்காணிப்பாளர் ரவி தலைமையில் காவலாளிகள் பணியில் இருந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் ஏதோ பொருட்கள் விழும் சத்தம் கேட்டது.

இதையடுத்து அங்கு பணியில் இருந்த காவலாளிகள் சத்தம் கேட்ட இடத்தை நோக்கி சென்றனர்.
அங்கு 50-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் ஆலை வளாகத்தில் கிடந்த இரும்பு குழாய் உள்ளிட்ட தளவாட பொருட்களை திருடிக்கொண்டிருந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காவலாளிகள், புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இதையடுத்து போலீசாரும், ஆலை காவலாளிகளும் சேர்ந்து கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். போலீசாரை கண்டதும் கொள்ளையர்கள் அருகில் உள்ள புதருக்குள் சென்றனர். உடனே போலீசார், கொள்ளையர்களை வெளியே வருமாறு எச்சரிக்கை விடுத்தபடி புதரை நெருங்கினர்.

ஆனால் கொள்ளையர்களோ எங்களை பிடிக்க முயற்சிக்க வேண்டாம், இங்கிருந்து சென்று விடுங்கள், இல்லையெனில் விபரீதம் நடக்கும் என்று மிரட்டல் விடுத்தனர். மேலும் கொள்ளையர்கள், தாங்கள் ஏற்கனவே காலி மது பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி தயார் செய்து வைத்திருந்த 5 குண்டுகளை அடுத்தடுத்து போலீசார் மீது வீசினர். இதில் 3 குண்டுகள் வெடித்து சிதறின.

மற்ற 2 பெட்ரோல் குண்டுகள் வெடிக்கவில்லை. சுதாரித்துக்கொண்ட போலீசார் விலகிக்கொண்டதால் காயமின்றி தப்பினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசாரும், காவலாளிகளும் அங்கிருந்து சற்று தொலைவில் சென்று நின்றனர். இருப்பினும் கொள்ளையர்கள் ஆலையில் இருந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள இரும்பு தளவாட பொருட்கள், தாமிர கம்பிகளை திருடிச்சென்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ், புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் வினதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் வெடிக்காமல் கிடந்த 2 பெட்ரோல் குண்டுகளை கைப்பற்றி, புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 50 கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %