0 0
Read Time:3 Minute, 49 Second

விருத்தாசலத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், அங்கிருந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஆய்வு நடத்தினார்.

பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்ததுடன், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

இதையடுத்து விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கல்லூரி அருகே உள்ள மாணவிகள் விடுதிக்கு சென்ற கலெக்டர், அங்கிருந்த மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். நம்ம மருத்துவமனை, மகத்தான மருத்துவமனை என்ற திட்டம் ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது.

விருத்தாசலம், அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு மருத்துவர்கள் குறைபாடு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் இன்னும் ஒரு சில மாதத்தில் கூடுதலாக 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

ராமநத்தத்தில் மருந்து கடையில் கருக்கலைப்பு செய்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று மற்றொரு இடத்தில் கருக்கலைப்பு செய்வதை அறிந்து இணை இயக்குனர், நேரடி விசாரணை மேற்கொண்டுள்ளார். அவர்கள் மீதும், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேப்பூரில் சிகிச்சை அளித்த போது குழந்தை இறந்த சம்பவம் காரணமாக விசாரணை செய்தபோது அவர் மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்றதற்கான சான்றிதழை காண்பிக்காமல் சென்றுவிட்டார்.

அதனால் யாராக இருந்தாலும் இதுபோன்ற தவறான சிகிச்சை அளித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அனைத்து தனியார் ஸ்கேன் சென்டர்களையும் கண்காணித்து வருகிறோம் என்றார்.

இந்த ஆய்வின்போது மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, நகரமன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், ஒன்றியக் குழு துணைத்தலைவர் பூங்கோதை, தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் எழில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாலச்சந்தர் ஆகியோர் உடனிருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %