தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் உட்பட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மக்களவையில் 39 பேருக்கும், மாநிலங்களவையில் 18 பேருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்கள் 12 பேரை சேர்த்து 245 உறுப்பினர் இடங்கள் உள்ளன. அதில், 3-ல் 2 பங்கு உறுப்பினர்களின் 6 ஆண்டு பதவி காலம் ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும். அதன் படி ஜூன் 21-ம் தேதி ஆந்திராவில் 4 பேருக்கும், தெலுங்கானவில் 2 பேருக்கு பதவி காலம் முடிவடைகிறது. மேலும் ஜூன் 29-ம் தேதியுடன் தமிழ்நாட்டில் 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதேபோல், பஞ்சாப், உத்தரகாண்ட், ராஜஸ்தான், சத்துஷ்கர் உள்ளிட்ட 15 மாநிலங்களில் மொத்தம் 57 உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது.
இதனால் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை ஜூன் 10-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வருகிற 24-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் 31-ம் தேதி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என்றும், ஜூன் 1-ம் தேதி வரை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் என்றும், ஜூன் 3-ம் தேதியுடன் வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும் என்றும் தெரிவித்துள்ளது. ஜூன் 10-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும், பின்னர் மாலை 5 மணிக்கு மேல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.
.பதவி காலம் நிறைவடையும் வரிசையில், தமிழ்நாட்டில் திமுக எம்பிகளான ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோரும், அதிமுக எம்பிகளான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகியோரின் பதவி காலம் நிறைவடைகிறது. இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை முதல்அமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.அதில் திமுக சார்பில் சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் திமுக கூட்டணி சார்பில் ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சு.கல்யாணசுந்தரம் 1963-ல் தன் அரசியல் பயணத்தை தொடங்கியவர். அவர் தற்போது தஞ்சை வடக்கு மாவட்டக் கழக செயலாளராகவும், தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவராகவும் உள்ளார். வழக்குறிஞர் கிரிராஜன் திமுகவின் சட்டத்துறை செயலாளராக உள்ளார். சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக இருந்த அவர், 2014 ஆம் ஆண்டு வட சென்னை தொகுதி வேட்பாளராக திமுக சார்பாக களமிறக்கப்பட்டார். கே.ஆர்.என். ராஜேஷ்குமார் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக உள்ளார். இவர் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் மூத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடி கே.ஆர்.ராமசாமியின் பேரன் ஆவார்.