கடலூர் தேவனாம்பட்டினத்தில் சில்வர் பீச் அமைந்துள்ளது. இங்கு விடுமுறை நாட்களில் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கடற்கரையை சுற்றி பார்த்து செல்வார்கள்.
அந்த வகையில் விடுமுறை நாளான நேற்று கடலூர் மாநகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் இருசக்கர வாகனங்கள், கார் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் சில்வர் பீச்சுக்கு படையெடுத்தனர்.
இதனால் சில்வர் பீச்சில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதில் சிறுவர்கள் கடல் அலையில் விளையாடியும், முதியோர்கள் அலையில் கால்களை நனைத்தும் மகிழ்ந்தனர்.
இதையடுத்து மாலை 6.30 மணியளவில் கடற்கரையில் இருந்த பொதுமக்களை போலீசார், மணற்பரப்பிற்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். பின்னர் அவர்கள் கடற்கரை அருகில் உள்ள மணற்பரப்பில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து பொழுதை கழித்தனர். மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.