சென்னை, பல்கலைக்கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழா, நூற்றாண்டு கலை அரங்கில் நடைபெற்றது. இதில் ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என். ரவி பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பட்டமளிப்புக்குப் பிறகு பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, பட்டம் பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். பட்டம் பெற்ற மாணவர்கள், தங்கள் குடும்பத்திற்காக மட்டுமின்றி நாட்டுக்காகவும் சேவையாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடி கூறியதுபோல் உலகின் தொன்மையான மொழி தமிழ் என குறிப்பிட்ட அவர், தமிழ் இலக்கியச் செழுமை கொண்டது என்றார்.
தமிழ் மொழியை தமிழ்நாட்டுக்கு வெளியேயும் கொண்டு செல்ல வேண்டிய தருணம் இது என்று குறிப்பிட்ட ஆளுநர், தமிழ்மொழியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்று கூறினார்.
இதற்காக, தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும், இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.
இதேபோல், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர வேண்டும் என்றும் ஆளுநர் கூறினார்.
கல்வி, மருத்துவம், தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு பாராட்டத்தக்க சாதனைகளை படைத்துள்ளது என்றும் ஆளுநர் ஆர்.என். ரவி பெருமிதம் தெரிவித்தார்.