பட்டின பிரவேசத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை:
தருமபுரம் ஆதீனம்
மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனம் சுமார் 500 ஆண்டுகள் பழமையான சைவ மடமாகும். இந்த மடத்தின் கட்டுப்பாட்டில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில், வைத்தீஸ்வரன்கோவில் உள்ளிட்ட புகழ்பெற்ற பல சிவாலயங்கள் உள்ளன. தருமபுர ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டின பிரவேச விழா நடைபெறுவது வழக்கம். ஆதீனத்தின் குரு முதல்வர் குருபூஜையை முன்னிட்டு நடைபெறும் இந்த பட்டின பிரவேச விழாவில் ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர வைத்து மடத்தை சுற்றி 4 வீதிகளிலும் அவரை பக்தர்கள் தோளில் தூக்கிச் செல்வார்கள். அப்போது ஆதீனம் பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்.
பட்டின பிரவேச விழா
இந்த ஆண்டுக்கான பட்டின பிரவேச விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக மனிதனை மனிதன் பல்லக்கில் தூக்கிச் செல்வதற்கு திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதனால் கடந்த மாதம் (ஏப்ரல்) 27-ந் தேதி மயிலாடுதுறை உதவி கலெக்டர் பாலாஜி பட்டின பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் பக்தர்கள் தூக்கி செல்ல தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த விழாவுக்கு தடை விதிப்பதா? என்று எதிர்ப்புக் கிளம்பியது. இந்த தடையை நீக்கும்படி பக்தர்களும், பல்வேறு ஆதீனங்களும் அரசை வலியுறுத்தினர். அ.தி.மு.க., பா.ஜ.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தின. நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பட்டின பிரவேச விழாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி பேசினார்.
தடை நீக்கம்
அப்போது சட்டசபை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, சட்டசபை பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் இந்த தடையை நீக்க வலியுறுத்தி பேசினர். இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்கள் நேரில் சந்தித்து பேசினர். இதைத்தொடர்ந்து கடந்த 8-ந் தேதி தருமபுரம் ஆதீன மடத்தின் பட்டின பிரவேச விழாவில் ஆதீனகர்த்தரை பல்லக்கில் மனிதர்கள் தூக்கிச் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி மயிலாடுதுறை உதவி கலெக்டர் பாலாஜி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசுக்கும், முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் நன்றி தெரிவித்ததோடு, தமிழக அரசை ஆன்மிக அரசு என்று பாராட்டினார்.
கொடியேற்றம்
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி தருமபுர ஆதீனத்தில் கொடியேற்றத்துடன் பட்டினபிரவேச விழா தொடங்கியது. 10-ம் நாள் விழாவாக நேற்று முன்தினம் தருமபுர ஆதீனகர்த்தர் நாற்காலி பல்லக்கில் சென்று மறைந்த ஆதீன கர்த்தர்களின் நினைவிடங்கள் எனப்படும் குருமூர்த்தங்களில் வழிபாடு நடத்தினார். நேற்று பட்டின பிரவேச விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று தருமபுரம் ஆதீனத்தில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
பல்லக்கில் வீதி உலா
இதையொட்டி தருமபுர ஆதீன வளாகம் முழுவதும் நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது. நேற்று சுமார் இரவு 10 மணி அளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் மேள தாளங்கள் முழங்க தருமபுர ஆதீனம் மாசிலாமணிதேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சாமிகள் பல்லக்கில் அமர்ந்து வீதிஉலா புறப்பட்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். தருமபுரம் ஆதீன மடத்தை சுற்றி உள்ள வடக்கு வீதியின் ஒரு பகுதி, கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி ஆகிய பகுதிகள் வழியாக சென்று மீண்டும் வடக்கு வீதி நுழைவு வாயில் வழியாக தருமபுரம் ஆதீன மடத்துக்கு ஆதீன கர்த்தர் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரிய சாமிகள் பல்லக்கில் சென்றார். அவரை சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மாறி மாறி தங்கள் தோளில் சுமந்து சென்றனர்.
அவருக்கு ஆதீனமடத்தை சுற்றியுள்ள 4 வீதிகளில் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கலை நிகழ்ச்சிகள்
விழாவில் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், புலியாட்டாம் ஆகிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பட்டின பிரவேச விழாவில் மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சாமிகள், தொண்டைமண்டல ஆதீனம் திருச்சிற்றம்பல தேசிகர் ஞானப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள், சூரியனார் கோவில் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடத்து இளவரசு, ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள்,பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. மூத்த நிர்வாகி எச்.ராஜா, தருமபுரம் ஆதீன சிவாகம தேவார பாடசாலை செயலாளர் ஆடிட்டர் குரு.சம்பத்குமார் மற்றும் பலா் திரளான பங்கேற்றனர்.
போலீஸ் பாதுகாப்பு
தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி.கயல்விழி மேற்பார்வையில் மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தருமபுரம் பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தருமபுர ஆதீன வளாகத்துக்கு செல்லும் அனைத்து நுழைவாயில் பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சோதனை மேற்கொண்டனர்.