மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர்கள், மொழிக் காவலர்கள், தமிழறிஞர்கள் ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியை கலெக்டர் லலிதா திறந்து வைத்து பார்வையிட்டார். இதுதுகுறித்து அவர் கூறுகையில், நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள், மொழிக் காவலர்கள், தமிழறிஞர்கள் ஆகியோரை நினைவுகூறும் வகையில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை, பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பார்வையிடலாம். சுதந்திர போராட்ட வீரர் தில்லையாடி வள்ளியம்மையை போற்றும் வகையில் தில்லையாடியில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
சீர்காழியில் அமைக்கப்பட்டுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபம் ரூ.43 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கும் பணி விரைவில் நடைபெற உள்ளது. மயிலாடுதுறை வரதாச்சாரியார் பூங்காவில் சமூக சீர்த்திருத்தவாதி, எழுத்தாளர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு ரூ.1 கோடி மதிப்பில் சிலை அமைக்கப்பட உள்ளது. மயிலாடுதுறையில், கவிஞர், எழுத்தாளர், தமிழறிஞர் வேதநாயகத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.3 கோடி செலவில் அரங்கத்துடன் கூடிய சிலை அமைக்கப்பட உள்ளது என்றார். அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.