கடலூர் திருவந்திபுரம் மலைபுதுநகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள போர்வெல் மூலம் தண்ணீர் எடுத்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அதில் உள்ள போர்வெல் பழுதாகி விடுவதும், அதை சீரமைத்து மீண்டும் பயன்படுத்துவதுமாக இருந்து வந்தது. அதேபோல் கடந்த 1 மாதத்திற்கு முன்பு மோட்டார் பழுதாகி விட்டது. அதை சீரமைக்க முடியாமல் ஊராட்சி நிர்வாகம் அப்படியே விட்டு விட்டதாக தெரிகிறது. இதையடுத்து அப்பகுதி மக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர்.
சிலர் அருகில் உள்ள கிராமம், கிணறுகளில் தண்ணீர் பிடித்து வருகின்றனர். இது பற்றி அறிந்த ஊராட்சி நிர்வாகம், அவர்களுக்கு டிராக்டர் மூலம் தண்ணீர் வழங்கி வருகிறது. அதுவும் மாலை வேளை மட்டும் தண்ணீர் வழங்கப்படுகிறது. அந்த தண்ணீரும் போதுமானதாக இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி மக்கள் அனைவரும் தெருவில் ஒன்று திரண்டு, தங்களுக்கு குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு ஒன்றிய, ஊராட்சி நிர்வாகம் புதிய போர்வெல் அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.