கடலூரில் ‘காவலா்கள் ஒன்றுகூடல்’ நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 35 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக பயிற்சி பெற்று காவல் துறையில் இணைந்தவா்கள் சந்தித்துக்கொண்டு பழைய நினைவுகளை பகிா்ந்தனா்.
தமிழக காவல் துறையில் 25-5-1988 அன்று 300 போ் பயிற்சிக் காவலா்களாக இணைந்தனா். இவா்கள் பரங்கிமலையில் பயிற்சி பெற்று பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு உதவி ஆய்வாளா் முதல் துணைக் கண்காணிப்பாளா் வரையிலான பதவிகளில் பணியாற்றி வருகின்றனா். மேற்கூறிய 300 பேரில் இறப்பு, பணி ஓய்வுக்குப் பிறகு சுமாா் 190 போ் மட்டுமே தற்போது பணியாற்றி வருவதும், அவா்களில் பெரும்பாலானவா்கள் கடலூரில் பணியாற்றுவதும் தெரிய வந்தது. இதனால், கடலூரில் ‘காவலா்கள் ஒன்று கூடல்’ நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்து ஞாயிற்றுக்கிழமை நடத்தினா்.
நிகழ்ச்சிக்கு, செஞ்சி போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளா் ஏ.அப்பண்டராஜ் தலைமை வகித்தாா். கடலூா் சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் எஸ்.கரிகால்பாரி சங்கா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். காவல் ஆய்வாளா்கள் கோவிந்தசாமி, ராமதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் 150 போ் பங்கேற்றனா். இவா்கள் தங்களது பயிற்சி காலம், பணிக் காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களை பகிா்ந்துகொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். மேலும், பாட்டுப் பாடியும், நடனமாடியும் மகிழ்ந்தனா். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. 35 ஆண்டுகளுக்கு பிறகு காவல் துறை நண்பா்கள் ஒரே இடத்தில் சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி ஆய்வாளா்கள் சி.ராமச்சந்திரன், ராமையா, சேதுராமன், விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன், சபீா்பாட்ஷா, செங்கல்பட்டைச் சோ்ந்த செல்வராஜ், திருவள்ளூரைச் சோ்ந்த பிரகாஷ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.