மயிலாடுதுறை ஆக 18-
மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் மதுபானக்கடையை சேதப்படுத்தி, விற்பனையாளருக்கு கொலைமிரட்டல் விடுத்த இளைஞருக்கு மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் மங்கைமடத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையில் விற்பனையாளர் பூபதி கடந்த 3.7.2018 அன்று பணியில் இருந்தபோது, நாங்கூர் மேலத்தெருவை சேர்ந்த இலக்கியராஜ்(34) என்பவர் கடனுக்கு மதுபாட்டில் கேட்டுள்ளார். பூபதி கொடுக்க மறுக்கவே ஆத்திரமடைந்த இலக்கியராஜ் கடையில் இருந்த மது பாட்டில்களை உடைத்து சேதப்படுத்தியதோடு அதைத்தடுத்த பூபதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து திருவெண்காடு போலீஸார் வழக்கு பதிவு செய்து இலக்கியராஜ் கைது செய்தனர். இந்த வழக்கு மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. புதன்கிழமை விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர்; ராம.சேயோன் ஆஜரானார். வழக்கின் முடிவில், டாஸ்மாக் ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்த இலக்கியராஜிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி இளங்கோ உத்தரவிட்டார்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.