0 0
Read Time:4 Minute, 38 Second

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் தமிழகத்தில் மொத்தம் 50 சுங்கச் சாவடிகள் உள்ளன. அதில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 28 சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

ஏற்கனவே 22 சுங்கச் சாவடிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. 2008-ஆம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலைகள் சுங்கக் கட்டணம் வசூல் சட்டத்தின்படி 60 கிமீ தொலைவுக்கு ஒரு சுங்கச் சாவடி மட்டும் தான் இருக்க வேண்டும். இதன்படி, 32 சுங்கச் சாவடிகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது.

பொதுவாக, சுங்கச் சாவடிகளில் 15 ஆண்டுகள் அல்லது புதிதாக தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க செய்யப்பட்ட முதலீடு தொகை கிடைக்கப் பெறும் வரை மட்டுமே முழுமையான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.

அதன் பின்னர் பராமரிப்புத் தொகையாக 40% மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். மேலும், சுங்க சாவடிகளில் கட்டண தொகை ஒரு ஆண்டுக்கு ஒரு முறை 10% வரை உயர்த்தலாம். ஆனால் நெடுஞ்சாலைக்கான முதலீட்டுத்தொகை பெறப்பட்டும், 15 ஆண்டுகளுக்கு மேலாகியும் செயல்பட்டு வருகின்றன.

அதிலும், பல சாலைகள் பராமரிப்பு முறையாக செய்யப்படாமல் மோசமான நிலையில் இருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர் உள்ளிட்ட 22 சுங்கச் சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் சுங்கக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.

உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி, ஓமலூர், தருமபுரி, சமயபுரம் உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1- ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளன.

சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்செந்தூர், மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு முக்கிய மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் தமிழகத்தின் மையப் பகுதியான சமயபுரம் சுங்கச்சாவடி வழியாக செல்ல வேண்டி இருப்பதால் அது முக்கியமானதாக கருதப்படுகிறது.

தினமும் பஸ், லாரி, வேன், கார் உள்ளிட்ட 22 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்லும் இந்த
சமயபுரம் சுங்க சாவடியில் காருக்கு ஒரு நாள் சுங்க கட்டணம் 45 இல் இருந்து 55 ஆகவும் மாதாந்திர கட்டணம் 1400 இல் இருந்து 1,605 ஆக உயர்கிறது.

பேருந்துக்கு சுங்கக் கட்டணம் 165 இல் இருந்து 185 ஆகவும், மாதாந்திர கட்டணம் 4,905 இல் இருந்து 5,620 ஆக உயர்கிறது. லாரிக்கு சுங்க கட்டணம் 265 இல் இருந்து 300 ஆகவும், மாதாந்திர கட்டணம் 7,880 இல் இருந்து 9,035 ஆக உயர்கிறது.

அதாவது, முன்பிருந்த கட்டணத்திலிருந்து 15% உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் திருவெறும்பூரை அடுத்த துவாக்குடி சுங்கச் சாவடி வழியாக நாள் ஒன்றுக்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன.

அங்கு கார், ஜீப் வாகனங்களுக்கு ஒரு நாளில் ஒரு முறை அந்த வழியாக பயணிக்க கட்டணமாக கார் மற்றும் ஜீப் ரூ.65-ல் இருந்து ரூ.75 ஆகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு ரூ.230 இல் இருந்து ரூ.260 ஆகவும் உயர்ந்துள்ளது.

கார், ஜீப் வாகனங்களுக்கு ஒரு நாளில் பலமுறை பயணிக்க வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.110 ஆகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு ரூ.344-ல் இருந்து ரூ.385 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %