0 0
Read Time:4 Minute, 44 Second

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிமுகவை ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டு வருவதற்காக கடந்த ஜூலை 11ஆம் தேதி அக்கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்ற நேரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டனர். அதிமுக அலுவலகத்திந் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது, ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு கலவரமானது. இதில், 47 பேர் காயமடைந்தனர்.

பேருந்து, கார், இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால், அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. பினனர் நீதிமன்ற உத்தரவின்பேரில் ஜூலை 21ஆம் தேதி சீல் அகற்றப்பட்டு அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. கட்சி அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டவுடன் அதிமுக அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி. பார்வையிட்டு, அதிமுக அலுவலகத்தில் காணாமல்போன பொருள்கள், ஆவணங்கள் குறித்து கணக்கெடுத்தார்.

இதுகுறித்து இபிஎஸ் தரப்பில் சி.வி.சண்முகம் மற்றும் வழக்கறிஞர்கள் ராயப்பேட்டை
காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகார் மீது எவ்வித நடவடிக்கையும்
விசாரணையும் காவல் துறை எடுக்கப்படவில்லை என இபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டியது. இந்த நிலையில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என சி.வி.சண்முகம் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்தார். அதனடிப்படையில், தமிழக அரசும் சிபிசிஐடிக்கு மாற்றுவதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. பின்னர் வழக்கு விசாரணையை சிபிசிஐடி துவங்க வழக்குப் பதிவு செய்தது. இதற்கான விசாரணை அதிகாரிகளை நியமித்து, ஓ.பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 200 மேற்பட்டவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல உதவி ஆய்வாளர் காசுபாண்டி கொடுத்த புகாரில், இபிஎஸ்
ஆதரவாளர்கள் 200 பேர் மீதும் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 200 மீதும் வழக்கு
பதிவு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி மற்றும் வீடியோ ஆதாரங்கள் ஆகியவை அடங்கிய பென்டிரைவ் மற்றும் வழக்கு சம்மந்தமான ஆவணங்களை சென்னை போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதனடிப்படையில் அதிமுக தலைமை கழகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான 4 வழக்குகளில், 2 வழக்குகளை சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை போலீசாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு அதிமுக கலவர வழக்குகள் மாற்றப்பட்ட நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் துவக்கியுள்ளனர். இதனால் தற்பொழுது சிபிசிஐடி போலீசார் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேரடியாக வந்து ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சி.பி.சி.ஐ.டி. டிஎஸ்பி ராஜா பூபதி தலைமையில் இந்த விசாரணை நடைபெற்று
வருகிறது. இதில், 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர். உடன், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %