மயிலாடுதுறை மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதை கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர் மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகே நகர விரிவாக்க பகுதியில் உள்ள டபீர்குளம் சந்து பகுதியில் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு தனியார் ஆஸ்பத்திரி, வணிக வளாகங்கள் உள்ளன.நகரின் மையப் பகுதியான இந்த டபீர் குளம் சந்தில் உள்ள பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டியில் இருந்து கழிவு நீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது.இந்த கழிவுநீர் அருகில் உள்ள காவிரி ஆற்றிலும் கலக்கின்றன.
இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மறியல் சாலையில் பாதாள சாக்கடை கழிவு நீர் தேங்கி கிடப்பதால் அப்பகுதி பொதுமக்கள் நகர விரிவாக்க பகுதியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சாலையில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார், நகராட்சி அதிகாரிகள் விரைந்து அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போக்குவரத்து பாதிப்பு இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.