மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி விசைத்தறி உரிமையாளர்கள் நான்காவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விசைத்தறிக்கு சிறப்பு பிரிவின் கீழ் குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வந்த மின்சாரம் தற்போது சிறு, குறு என்ற பொது அடிப்படையில் 30 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுக்கு 6 சதவிகிதம் உயர்வு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு இந்த கட்டணம் பெரும் உயர்வாகவும், சுமையாக இருப்பதாக கருதுகின்றனர். வருமானம் இன்றி தவிக்கும் விசைத்தறி உரிமையாளர்கள் இந்த மின்கட்டணத்தை செலுத்த இயலாது என்று தெரிவித்தனர்.
இந்த மின்கட்டண உயர்வு தொடர்ந்தால் நெசவு தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும்.இந்த நிலையில் தமிழக அரசு உடனடியாக மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நான்காவது நாளாக வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி அவிநாசி, தெக்கலூர், சாமளாபுரம் மற்றும் கோவை மாவட்டத்தில் சோமனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைத்தறி உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள 2 லட்சம் விசைத்தறியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மின்கட்டண உயர்வால் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் 130 கோடி ரூபாய் மதிப்பிலான 4 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.