தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 26-ம் தேதி பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல்வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் 47 சதவீதம் மழை கிடைக்கிறது. இதில் ஒரு சொட்டு மழைநீர் கூட வீணாகாமல் சேமிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான வழிமுறைகளை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக பல்வேறு துறை அமைச்சர்கள், உயர் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் வருகிற 26-ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ள தடுப்புப் பணிகள் தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்காகவே மழை நீர் வடிகால் பணிகளை அவர் அவ்வப்போது ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில், மழை நீர் வடிகால் பணிகளை விரைவாக மேற்கொள்வது, கல்வி நிலையங்களில் மழை நீரால் பாதிப்பு ஏற்படாதவாறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது, வருவாய் துறை மூலமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், உள்ளிட்ட பல்வேறு துறைகளுடைய ஒருங்கிணைப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்படுவதாக தெரிகிறது. மேலும் தாமதமாக நடைபெறக்கூடிய பணிகளை விரைவுப்படுத்துமாறும் இந்த கூட்டத்தில் முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தவுள்ளார்.