பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு
இந்து மக்கள் கட்சி கோரிக்கை.
இந்து மக்கள் கட்சி அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்.
“தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மற்றும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா உள்ளிட்ட அமைப்புகளை தடை செய்து அதன் நிர்வாகிகளை சிறையில் அடைக்க வேண்டுமென மத்திய அரசை இந்து மக்கள் கட்சி வலியுறுத்திவுள்ளது.
கலவரங்கள் நடத்த நிதியுதவி செய்வது, ஆயுத பயிற்சி முகாம்கள் நடத்துவது, பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்கள் சேர்ப்பது உள்ளிட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீதான 19 வழக்குகளை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை செய்து வருகிறது.
இந்த வழக்குகள் தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மராட்டியம், ராஜஸ்தான், உத்திராதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 93 இடங்களில் தேசிய புலனாய்வு முகமையினர் கடந்த வியாழக்கிழமை சோதனை நடத்தி 45 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இதில் தமிழகத்தில் மட்டும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் சாலைமறியல், ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பாரதத்தின் நீதி அமைப்பு, சட்டம் மற்றும் அரசியல் சாசனம் மீது நம்பிக்கையில்லாத தேசவிரோத கும்பல்கள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி கலவரத்தை தூண்ட முயற்சித்து வருகின்றன.
மேலும் சமூக வலைதளங்களில் அரசிற்கு எதிரான பொய் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.
துரதிருஷ்டவசமாக சில அரசியல் கட்சிகளும் தேச துரோக கும்பல்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விமர்சித்து வருகின்றனர்.
கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி, இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து இயக்க நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மீது பொட்ரோல் குண்டு வீசப்பட்டு வருகிறது.
கோவையில் கடந்த 1998ஆம் ஆண்டை நினைவுபடுத்துவது போல பல இடங்களில் குண்டு வீசப்பட்டுள்ளது.
கோவை,பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், தாராபுரம், ஈரோடு, திண்டுக்கல், ராமநாதபுரம், சென்னை தாம்பரம், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் குண்டுவீச்சு சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இச்சம்பவங்களை வேடிக்கை பார்க்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடு முழுவதும் ஒரு வித பதட்டத்தை உருவாக்கி, தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட அதன் துணை அமைப்புகளை தடைசெய்ய வேண்டுமென இந்து மக்கள் கட்சி வலியுறுத்துகிறது”.
இவ்வாறு இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் அறிக்கை விடுத்துள்ளார்.